Ad Code

Recent Posts

லெப். நந்தனின் வீர வரலாற்று நினைவுகள்

லெப். நந்தன் 
வீரகத்தி இராஜேந்திரம்

நெடுங்கேணி, மணலாறு.

வீரப்பிறப்பு:-06.01.1969

வீரச்சாவு:-17.07.1990


நிகழ்வு:-முல்லைத்தீவு மாங்குளத்தில் சிறிலங்கா படையினருடன் இடம்பெற்ற நேரடிச் சமரின்போது வீரச்சாவு

 

கப்டன் யேசுதாஸ்

வீரகத்தி விக்னேஸ்வரன்

கற்குளம், நெடுங்கேணி.

பிறப்பு: 01.10.1965

வீரச்சாவு: 29.07.1989


இணைந்து ஒளிகள்

புலிகளின் காட்டு முகாம்.


அன்சாரினதும் யேசுதாசினதும் உடல்கள் வைக்கப்பட்டிருந்தன. சண்டையின் களைப்பு, தம் தோழர்களை இழந்துவிட்ட மனதின் தாக்கம், வெளிக்காவல் நிலைகளிலிருந்த தோழர்களைத் தவிர அனைவருமே இருந்த -- இருந்த இடத்தில் தூங்கிவிட்டார்கள்.


இந்தியர்களின் கண்களிற்குத் தென்படக்கூடாது என்ற முடிவுடன், குப்பி விளக்கொன்று மங்கிய ஒளியைப் பரப்பிக்கொண்டிருந்தது. அந்த விளக்கொளியில்...... யேசுதாசின் கறுத்த, அழகிய முகத்தைப் பார்த்த படியே...... கலைந்து கிடந்த அவனது தலையைத் தடவியபடியே...... நந்தன் இருந்தான்.


அவனது தேகம் நடுங்கிக் கொண்டிருந்தது. இடையிடையே குலுங்கிக் குலுங்கி அழுதான். பெரிதாகச் சத்தமிட்டு அழவிரும்பியும் தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டான் போலும்! மெல்லிய முனகல் சத்தம் இடையிடையே கேட்டு அடங்கியது.


மனிதர்களில் சிலர் இழப்புக்களை ஏற்றுக் கொண்டு அதனைத் தாங்கிக்கொள்ளும் மனப்பக்குவத்தைப் பெற்றுக்கொண்டாலும், அவர்களை அசைத்துப் பார்க்கும் சம்பவங்களும் நடந்துகொண்டு தானே இருக்கின்றன.


நந்தனால் இந்த இழப்பைத் தாங்கிக் கொள்ள முடியுமா....? இல்லை . முடியாது... அவனால் முடியாது.


* * *


யேசுதாஸ் பிறந்த பிற்பாடு நாட்கணக்கு மாதக்கணக்கு எல்லாம் பார்த்தால், சரியாக இரண்டு வருடத்திற்குப் பின்பு நந்தனைத் தாயார் பெற்றெடுத்தாள். நிறம், முகம், சிரிப்பு எதிலுமே வித்தியாசமில்லை. ஆனால் சின்னவன் நந்தன் சிறிது குழப்படிகாரனாக இருந்தான்.


அவர்களிருவரும் ஒருவருக்கொருவர் அன்பைக் கொட்டி, அடிபட்டு, கடிபட்டு ஒன்றாகவே வளர்ந்தார்கள். பாடசாலைக்குச் செல்கையிலும் வயலில் காவலுக்கு நிற்கையிலும், அந்திசாயும் நேரங்களில் பட்டிகளை ஓட்டி வருகையிலும், ஏன் மூத்த அண்ணனுக்குப் பயந்தபடியே ஆற்று நீரில் பாய்ந்து விளையாடுகையிலும், அவர்கள் சேர்ந்தே இருந்தார்கள்.


நந்தன் அந்த இளவயதிலேயே அண்ணனில் உயிரை வைத்திருந்தான். உண்மையில் அது எவ்வளவு இனிமையான நாட்கள். அவர்கள் வயலிற்கு இரவுக் காவலுக்குச் செல்வார்கள் . 'இருட்டு...... நீர் நிறைந்த வயல்களின் வரம்புகளில் விஷங்கள் ஏதாவது கிடக்கலாம்' - அந்த நினைவு வந்தவுடனேயே அவன் அண்ணனை நிறுத்திவிட்டு, முன்னால் பாய்ந்தோடுவான்.


'ஏதாவது கடிக்கிறதா இருந்தா அது என்னைக் கடிக்கட்டும்' எனத் தனக்குள் முணுமுணுப்பான்.


வீட்டிலும் அப்படித்தான் தனக்கென தனியாக எதையுமே எடான். எல்லாமுமே அண்ணனுக்கும் வேண்டும்: அல்லது அது அவனுக்கு வேண்டாம்.


அம்மா மட்டும் உள்ளுக்குள் மகிழ்ச்சியோடு ஏசுவாள். “ அவனுக்கு அண்ணனில பைத்தியம் பிடிச்சிருக்கு,''


அந்தச் சிறு வயது நாட்கள் தான் எவ்வளவு விரைவாகக் கடந்து போயின.


வளர்ந்த பின்பும் தோற்றத்தில் அவர்களிடையே பெரிதாக எந்த வித்தியாசமும் இல்லை, ஆனால் குணவியல்புகளில் நிறையவே வேறுபட்டார்கள்.


யேசுதாஸ் உணர்ச்சிக்கு ஆட்படுவதைத் தவிர்த்தான். பேச்சுக்களைத் தவிர்த்து எப்போதும் அமைதியாக இருந்தான். சில நேரங்களில் மட்டும் மிக அருமையாகக் கோபப்பட்டான்.


நந்தனோ அதிகமாக உணர்ச்சிவசப்படுவனாகவும், கோபப்படுபவனாகவும் இருந்தான், சில நேரங்களில் மட்டும் அண்ணனுக்குச் சொந்தமான அமைதிக்கு அடிபணிந்து இருந்தான்.


சின்ன வயதில் தோன்றிய வயல் வெளிப் பழக்கம்; இனிமையான குரல் இருவருக்கும் சொந்தமானதாக இருந்தது. அதிலும் பாருங்கள் ஒரு வேறுபாட்டை, யேசுதாஸ் எப்போதுமே அமைதியான - இதயத்தை வருடும் சோகப் பாடல்களையே பாடினான்; நந்தனோ உற்சாகம் நிறைந்த - மகிழ்ச்சியான பாடல்களை விரும்பி அடிக்கடி பாடினான்.


வன்னியின் அந்த எல்லையோரக் கிராமங்களின் அமைதிதான் எவ்வளவு விரைவாக அழிந்து போனது!


டொலர், கென்ற் பண்ணைகளிலிருந்த தமிழர்களை விரட்டிவிட்டு சிங்களக் காடையர்கள் குடிபுகுந்தனர். தொடர்ந்தும்........ நாவலர் பண்ணை , தனிக்கல்லு என தமிழர் கிராமங்கள் பறிக்கப்பட்டுக்கொண்டிருந்தன, வேறொரு புறத்தால் காடுகள் அழிக்கப்படத்தொடங்கின.


தமிழர் கிராமங்களின் வயல் வெளிப் பாடல்களுக்கு நடுவே, காடழிக்கும் இயந்திரங்களின் கொடூர ஓசையும் கலந்துகொள்ளத் தொடங்கியது.


அந்த நாட்களில் தான், மார்கழி மாதத்தின் மழைத்தூறல் விழுந்துகொண்டிருந்த தோர் மாலைநேரம், யேசுதாஸ் கிராமத்தை விட்டு வெளியேறிச் சென்றான்.


புலிகளின் ஆறாவது பயிற்சி முகாம். -


பயிற்சி எடுத்துக்கொண்டிருந்த புதியவர்களில் யேசுதாசும் ஒருவன். இனிமையான அவனது குரலைக் கேட்ட யாரோ, அவனுக்கு யேசுதாஸ் என்ற தென்னிந்தியப் பாடகரின் பெயரை வைத்துவிட்டார்கள்.


அண்ணன் சென்றதன் பின்பு நந்தனால் தனித்து இருக்க முடியவில்லை . அதிகமாக நண்பர்களை நாடினான். அவர்களின் அர்த்த மற்ற வாழ்க்கை அவனுக்கு வெறுப்பாக இருந்தது. இதனிடையே ஒதியமலையிலும் பட்டிக்குடியிருப்பிலும் மிகப்பெரும் இனப்படுகொலைகள் நடந்து முடிந்தன. அந்தப் பழந்தமிழ்க் கிராமத்தவர்கள் சிங்கள வன்முறையாளர்களால் விரட்டப்பட்டிருந்தார்கள், சிங்களக் காடையர்களின் வெறிச்செயல்களுக்கு அயல் கிராமமான கற்குளமும் உள்ளாகியது.


சிங்களக் காடையர்கள் அடிக்கடி கிராமங்களில் நுழைந்தார்கள். நெற்கதிர்கள் பூத்துக் குலுங்கும்பொழுது வயல் நிலங்கள் எரிந்தன. கைக்கெட்டும் கிராமத்துக் குடிசைகள் எரிந்து சாம்பலாகும். இந்த நிலையில், தன் தாய்மண்ணை நேசிக்கும் எவனால் தான் போராட்டத்திலிருந்து ஒதுங்கி வாழ முடியும்?


சில நாட்களில் நந்தனும் புலிகளுடன் இணைந்துகொண்டான்.


பயிற்சியை முடித்த பின்பு வன்னி மண்ணுக்கு வந்த யேசுதாஸ், மேஜர் தாடிபாலா வின் குழுவில் ஒருவனாக நின்று, சிறீலங்கா இராணுவத்தினருக்கெதிராகப் போரிட்டான். எம் . 16 சுரிகுழல் துப்பாக்கியை இயக்குவதில் அவன் மிகவும் வல்லவனாக இருந்தான். குறி இலகுவில் தவறுவதில்லை . முதலாவது சூட்டில் எதிரி ஒருவன் விழுந்தே இருப்பான்.


அமைதி என்ற போர்வையில் இந்தியர்கள் வந்துசேர்ந்த சில நாட்களின் பின்பு, முகாம் ஒன்றில் தற்செயலாகச் சந்தித்துக் கொண்ட நந்தனும் யேசுதாசும் ஒரு முடிவுக்கு வந்தார்கள்.


குடும்பத்தின் நிலையைக் கருத்தில் எடுத்து அம்மாவின் ஆறுதலுக்காக நந்தன் வீட்டில் நிற்பதென்றும், யேசுதாஸ் இயக்கத்தில் தொடர்ந்து இயங்குவதென்றும், 'தீர்மானித்துக்கொண்டார்கள், கிராமத்தில் நின்றாலும் நந்தன் புலிகளின் அரசியல் வேலைகளில் முழுமையாகவே செயற்பட்டுக் கொண்டிருந்தான். அத்துடன் பட்டிக்குடியிருப்பு பாடசாலையில் சேவை அடிப்படையில் இயங்கும் ஆசிரியராகவும் இருந்தான் -


இந்தியர்களின் வேடம் மிக விரைவாகவே அம்பலப்பட்டு, இந்தியப் படைகளுக்கெதிரான போரில் தமிழீழம் குதித்தது. வீட்டில் நின்ற நந்தன் இந்தியப் படையினருடன் மோதல் தொடங்கியவுடன், இயக்கத்தில் மீண்டும் இணைந்து கொண்டான். சண்டைகள் இப்போது அதிகமாகவும் கடுமையாகவும் இருந்தன. அந்தச் சகோதரர்கள் இருவரும் அவர்கள் பிறந்து வளர்ந்து விளையாடிய மண்மடியிலே, துப்பாக்கிகளும் தோழர்களுமாக எதிரியைத் தேடி அலைந்து திரிந்தார்கள்.


நந்தன் இப்போதும் அப்படித்தான், அண்ணனுக்கு முன்பாக மிக வேகமாக நடப்பான். 'வருகின்ற ஆபத்து எதுவாக இருந்தாலும் அது முதலில் என்னைத் தாக்கட்டும்' என்று, அவன் மனம் சொல்லும். யேசுதாசோ எதையும் வெளிக்காட்ட மாட்டான். இரவுகளில் மட்டும் அவனுக்குப் பிடித்தமான அந்தச் சோகப் பாடல்களைமெதுவாக முணு முணுப்பான்.


இப்படித்தான் இன்று காலையும் அவர்கள் எல்லோரும் ஒன்றாகப் புறப்பட்டார்கள். சண்டை கடுமையாகவே இருந்தது. எதிரி இருப்புக்கொண்டிருந்த அந்தச் சிறிய முகாமின் வாசலில் யேசுதாஸ் விழுந்தான். அவனது உடலை எடுத்துக்கொண்டு பின் வாங்கியபொழுது, வேறொரு தோழன் அன்சாரின் உடலையும் சுமந்து வந்தான், அன்று இரவு முழுவதும் நந்தன் தூங்கவில்லை. மறுநாள், அவனது அண்ணனையும் அவனது தோழனையும் புதைத்துவிட்டு வந்த பின்பும் அவன் தூங்கவுமில்லை; சாப்பிடவும் இல்லை . ஏன்.......... அதிகமாக ஒருவருடனும் கதைக்கக்கூட இல்லை.


நாட்கள் சென்றன, சூழ்நிலைகளும் மாறிக்கொண்டிருந்தன. நந்தனோ தளராத உறுதியுடன் போராடிக் கொண்டிருந்தான். எதிரியோ இழப்புக்களைக் கண்டு போராளிகள் அஞ்சி ஒடுங்கிப்போய்விடுவார்கள் என, நினைக்கின்றான். ஆனால் புலிகளோ அதனாலேயே உறுதிகொள்கிறார்கள் : வெற்றியைப் பேறவேண்டும் என்ற ஓர்மத்துடன் போராடுகின்றார்கள்,


ஆனால், நந்தனில் புதிய மாற்றம் ஒன்று இருக்கத்தான் செய்தது. அவனது அண்ணனுக்குச் சொந்தமான அமைதியான அந்தச் சோகம் நிறைந்த பாடல்களை, அவன் இப்போது முணுமுணுத்துக் கொண்டிருந்தான்.


இந்தியர்கள் வெளியேறினார்கள். சமாதானம் பேசிக்கொண்டிருந்த சிங்களப் பேரினவாதம், தன் கொடூரமுகத்தைக் காட்டத்தொடங்கியது . மீண்டும் நாடெங்கும் சிங்களச் சிப்பாய்களை எதிர்த்து புலிகள் போரிட்டார்கள்.


நந்தனும் ஒரு புலிவீரனாக சண்டைக் களங்களில் நின்று செயற்பட்டான்.


மாங்குளம் இராணுவ முகாமிலிருந்து சிங்களப் படைகள் வெளியேற முயன்ற ஒரு நாள்....... தோழர்களுடன் நந்தனும் சண்டையிட்டுக் கொண்டிருந்தான், ஆக்கிரமிப்பாளர்களின் ஒவ்வொரு அசைவிற்கும் போராளிகள் பதில்சொல்லிக் கொண்டிருந்தார்கள். அன்றைய சண்டையின் முடிவில் நந்தனும்......


இப்போதும் அந்தக் காடு ...... அவர்களின் கல்லறைகள் .... எங்குமே அவர்கள்...... இப்போதும் அங்கு சென்று பாருங்கள் - அவர்களின் அந்த இனிய, சோகம் நிறைந்த பாடல்கள், காற்றில் மிதந்து நெஞ்சை அழுத்தும்.

                                 



                                                                                 

-விடுதலைப்புலிகள் குரல் 30


விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை மக்களைக் காத்த வீரமறவர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…!

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்” 

கருத்துரையிடுக

0 கருத்துகள்

Comments


 

Ad Code