குமாரசாமி ரமேஸ்குமார்
வண்ணார்பண்ணை
யாழ்ப்பாணம்
வீரப்பிறப்பு: 09.10.1972
வீரச்சாவு: 18.07.1991
நிகழ்வு: வெற்றிலைக்கேணிப் பகுதியிலிருந்து முன்னேறிய சிறிலங்கா படையினருடனான சமரில் வீரச்சாவு
இதுதான் என்ரை கடைசிச் சண்டையாக இருக்கலாம் இப்படிக் கூறிவிட்டு என்னைத் திரும்பிப் பார்த்தான், அச்சத்தைக் காணவில்லை. விடுதலை புலிகளில் மட்டுமே காண முடிந்த களதில் தோன்றும் புன்னகைதான் இருந்தது.
காசி அண்ணாவின் பத்துத் தடவை பாடை வராது' என்ற கவிதையில் உள்ள, செத்து மடிதல் ஒரேயொரு முறைதான் சிரித்துக் கொண்டே செருக்களம் வாடா என்ற வரிகள்தான் ஞாபகத்திற்கு வந்தன. அந்தக் கணத்தில் தனது சாவு நிகழ்வதற்குள் எப்படியெப்படி எதிரி தரப்பில் மிகக் கூடியளவு சேதத்தை விளைவிக்கலாம் என்ற எண்ணமே மேலோங்கியிருந்தது.
ஆனையிறவுத் தாக்குதலுக்குத் திட்டமிடும் போதே வெற்றிலைக்கேணி, கட்டைக்காடுப் பகுதியில் மிகப்பெரும் போர் மூளும் என்பது எமக்குத் தெரியும். கடல்வழியால் தரையிறங்கக் காத்திருக்கும் சிறீலங்காப் படைகளுக்கு இது உங்களுக்குச் சொந்தமான நிலமல்ல உங்கள் இஸ்டப்படி கால் வைக்க என்ற செய்தியைச் சொல்லக் காத்திருந்தபோதே ஈழவன் இதுதான் என்ரை கடைசிச் சண்டையாய் இருக்கலாம் என்று கூறினான்.
என்னையும் ஈழவனையும் தவிர்ந்த மற்ற எல்லோரும் கடலையே எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். அவர்கள் கவனமெல்லாம் அங்கே- நான். ஈழவனின் கூற்றுக்கு நான் பதில் சொல்லாமலிருக்கும் போது மீண்டும் சிரித்தபடி அவன் தொடர்ந்தான். மச்சான் உவன் சிங்களவன்ரை மோட்டுத்தனமான நடவடிக்கையைப் பார்க்க எனக்கு மகாபாரதக்கதை- என் ஞாபகத்திற்கு வருகுது. அந்த கதையில பாண்டவருக்கு எதையும் கொடுக்க கெளரவர்கள் தயாராக இருக்கேல்ல எந்த தூதுக்கும் அவன் மசியேல்லை. நாடு கேட்டு, ஊர் கேட்டு, ஐந்து வீடு கேட்டு, கடை- சியா ஒரு வீடு கேட்ட போதும் துரியோதனனுக்கு அதைக்குடுக்க மனம் வரவில்லை. ஒரு ஊசிமுனை நிலம்கூட தரமாட்டன் எண்டிட்டான். அதால கடைசியில போர் செய்தே பாண்டவர்கள் தங்களுடைய நிலத்தைப் பெற்றிச்சினம். அது போலத்தான் எங்கட நிலைமையும்- எங்கட முந்தையர்களின் தவறால எங்கட நிலமும் சுதந்திரமும் பறிபோன நிலையில் இப்ப நாங்கள் நடுத் தெருவில் அகதிகளாக நாடு விட்டு நாடு தாண்டி ஓடி சீ. இதனைச் சொல்லும்போது தாக்கம் அவனுக்கு வேதனையின்
நான் ஒன்றும் பேசவில்லை. அவன் சொல்வதையே கேட்டுக் கொண்டிருக்கின்றேன். நான் இவனை நன்றாகப் புரிந்தவன். இதையெல்லாம் இவன் சொல்லும்போது எனக்கு ஒரு சம்பவம் ஞாபகத்திற்கும் வந்தது.
காவற் கடமையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தான் இவன். திடீரென எதையோ உற்றுப் பார்த்தான். இந்தா மச்சான்! இதைப் பிடி ஏகேயை என்னிடம் திணித்துவிட்டு என்ரை அம்மா வாறா நான் ஒளியப் போறன். அவ கேட்டா நான் இல்லை வெளியில போட்டன் எண்டு சொல்லு என்று விட்டு ஓடி ஒழிந்து கொண்டான். இவன் அப்படி ஒளிவதற்கு பல காரணங்கள் உண்டு, அந்த முகாமில் தமிழீழத்தின் எல்லாத் திசைகளிலும் உள்ள போராளிகள் இருக்கின்றார்கள். அவர்களில் கணிசமானோர் தாய் தந்தையரைப் பார்க்கும் வாய்ப்பு இல்லாதவர்கள்.
தமது தாய், தந்தையர் எந்த அகதி முகாமில் இருக்கின்றார்கள் என்றோ ஏன் உயிரோடுதான் இருக்கின்றார்கள் என்றோ தெரியாதவர்கள். இவர்களோடு இருக்கும்போது தான் மட்டும் பெற்றோரைச் சந்தித்து மகிழ்ந்து கொண்டிருக்க இவன் மனம் ஒப்பவில்லை. அதனால் அப்படியான சந்திப்பை இவன் தவிர்க்க விரும்பினான். இதைவிடவும் பெற்றோரைச் சந்திப்பதால் இன்னொரு சங்கடம் ஏற்படும் என நினைத்தான். அது பெரும்பாலும் வடபகுதிப் போராளிகளுக்கு மட்டுமேயுள்ள சங்கடம். சொந்த நாட்டிலிருந்து பெற்றோரால் அகதி என்ற முத்திரையுடன் வெளிநாடுகளுக்கு துரத்தப்படுவது. அதுவும் போராட்டத்தின் பெயரால்.
தாயார் எமது முகாம் வாசலையடைந்தார். திணிக்கப்பட்ட காவல் கடமையில் இருந்த என்னிடம்தான் நேரே வந்தார், வண்ணார் பண்ணையிலிருந்து அந்த முகாம் வரை வந்து சேரத்தான் பட்ட சிரமத்தைச் சொன்னார்.
அவரது தோற்றமே அவரது களைப்பை உறுதிப்படுத்திற்று. ஈழவனை ஓருக்காப் பாக்கோணும், இந்த வார்த்தைகள் திரும்பத் திரும்ப ஒலித்தன. எனது கண்கள் அவன் ஒளித்திருந்த இடம் நோக்கித் திரும்பின. இல்லை சொல்லுகிறது. எனக்கு மனம் கேட்கவில்லை, அவனது தாயினுள் எனது தாயைக் கண்டேன். இருங்கோம்மா ஈழவனின் விருப்பத்திற்கு மாறான வார்த்தைகள் என்னிடமிருந்து ஒலித்தன. உள்ளே சென்று சில நிமிடச் சண்டையின் பின் வலுக்கட்டாயமாக அவனை அனுப்பினேன்.
தயங்கித் தயங்கிச் சென்றான் அவன். அருகே வந்த மகனைக் கட்டியணைத்து முத்தமிட்டு தன் தவிப்பையெல்லாம் தீர்த்தார் தாயார். வழக்கமான உரையாடல்களுக்குப் பின் இந்தியன் ஆமிதான் போட்டாங்களே அப்பன், நீ இயக்கத்தை விட்டு வாவன். உன்ரை மூண்டு அண்ணன்மாரையும் வெளியில் அனுப்பிப்போட்டன். நீ வந்து வீட்டை இரன். இவன் விரும்பாத வார்த்தைகள் தாயிடமிருந்து வந்ததும் எரிமலையானான்.
நீங்கள் இப்படிக் கேப்பீங்களெண்டால் நான் உங்களைச் சந்திக்க வந்திருக்கமாட்டன். தாயை, தகப்பனை, சகோதரத்தை இழந்த எத்தினை போராளிகளுக்கு மத்தியில் இருந்து உங்களைச் சந்திக்க வந்திருக்கிறன். உங்கடை மகனோட இருந்து செத்துப்போன பொடியளை நினைச்சுப் பாருங்கோ. அவங்களுக்கு எல்லாருக்கும் தாய், தகப்பன், சகோதரங்கள் வெளிநாட்டிலையா? அவங்களால தங்கட சொந்தம், பாசம் எண்டு இருக்கேலாதா?
இல்லாட்டி அவங்களால வெளிநாடு போகமுடியாதா? ஆரோ போராடிக் கொண்டிருக்க போராட்டத்தின்ரை பெயரால வெளிநாட்டில போய் அகதியெண்டு திரியிற வாழ்க்கைகாகவே என்னை வரச்சொல்லிக் கேக்கிறீங்கள். தொடர்ந்து பொரிந்து தள்ளுகிறான். தாய் பேசாமல் நிற்கிறார். கண்ணீர் மட்டும் கட்டுக்கடங்காமல் பாய்கிறது. ஒரு கணம் தனது பேச்சை நிறுத்திய அவன் அம்மா நான் வாழ்ந்தாலும் தமிழ் மண் செத்தாலும் தமிழ் மண் என்று சொன்னான். அவ் வார்த்தைகள் உணர்ச்சியில் தோய்ந்து ஒலித்தன. நான் மெய்சிலிர்த்து நின்றேன்.புகலிடமற்ற அகதிகள் மேல்கொண்ட பாசத்தால் பொருளாதார அகதிகள் மீது பாயும் அவனது கோபம் நியாயமாகத்தான் தெரிந்தது எனக்கு.
இப்படியான குணங்கள்தான் அவனைப் போராளியாக்கின. அவனை இரவு பகல் எனப்பாராது உழைக்க வைத்தது. வெற்றிலைக்கேணிக் கடற்கரையில் அவன் என்னோடு பேசிக் கொண்டிருக்கையில் இவ்வாறான சிந்தனைகளே என்னுள் ஓடிக் கொண்டிருந்தன.
அவன் பேசிக் கொண்டிருந்தான் நான் அவனது இயல்பை ரசித்துக் கொண்டிருந்தேன். இந்நிலையில் நாம் எதிர்பார்த்த அந்தச் சண்டை மிகச் சில நாட்களுக்குள் தொடங்கிவிட்டது. ஊன், உறக்கம் அனைத்தையும் மறந்த சண்டை அது. தாகம் மட்டும் எமக்கிருந்தது. அது தமிழீழத் தாயகம் பற்றியது. ஆகாயம் கடல் வெளி பெயரிலேயே அதன் தன்மையை வெளிப்படுத்தும் அப்போரில் புயல் வேகத்தில் பதியத் துடித்த சிங்களப்படைகளின் கால்கள் நத்தை வேகத்தில் ஊர்ந்தன. பல பாலைவனப் போர் என வர்ணிக்கப்பட்ட இப்போரில் எஞ்சியிருந்த மரங்கள், வீடுகள் அனைத்துமே சேதமாகிவிட்டன. சேதமாகாதது எமது உறுதி மட்டுமே.
ஒரு திசையால் ஈழவனின் குழுவை நெருங்கியது சிங்கள இராணுவம், அந்த நிலையில் இரு படையினரது எண்ணிக்கை மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசத்தில் இருந்தது. எதிரியின் வியூகத்திற்குள் ஈழவனின் படைகள் சிக்கிவிட்டன. உமிழ்ந்து கொண்டிருந்த ரவைகளின் இடைவெளி அங்குலக் கணக்கில்கூட இல்லை. வேட்டொலிகளையும் விமானக் குண்டுவீச்சையும் தவிர வேறெந்தச் சத்தமும் இல்லை எப்படியோ வீரச்சாவடைந்தவர்களைத் தவிர காயமடைந்தவர்கள் மீட்டெடுக்கப் படுகின்றனர். இந்நிலையிலும் போர்க்களத்தை விட்டுப் பின்வாங்க இவன் மனம் ஒப்பவில்லை. ஒரு கட்டத்தில் தனியனாகவே களத்தில் நிற்க வேண்டியிருந்தது. விடாதேங்கோ, விடாதேங்கோ இது தான் அவனது இறுதி வாக்கியங்கள். இதுதான் நாம் அவனைத் தொலைத்த வரலாறு
அடிக்கடி மகாபாரதக் கதைகளை ஞாபகப்படுத்திப் பேசும் ஈழவன் மகாபாரதப் போரில் இப்படித்தான் அபிமன்யுவை சுற்றி வளைத்தனர் என்பதை மறந்துவிட்டான். அதனால் மாவீரர் துயிலும் இல்லத்தில் இவனது பெயரைச் சுமந்தபடி ஒரு கல் எழுந்து நிற்கிறது.
போராளி நாவலன்
0 கருத்துகள்