செல்வமலர் கோபாலப்பிள்ளை
05ம் வாய்க்கால், பன்குளம்,
திருகோணமலை
வீரப்பிறப்பு: 30.06.1973
வீரச்சாவு: 27.07.1991
நிகழ்வு: கிளிநொச்சி ஆனையிறவு மீதான ஆ.க.வெ.நடவடிக்கையில் தடை முகாம் மீதான 2வது தாக்குதலின்போது வீரச்சாவு
பன்குளம், அழகான தமிழ்க் கிராமம். முக்காலமும் நீர் நிறைந்து நிற்கும் குளம். குளத்திற்கு கீழாகப் பரந்து விரியும் வயல் நிலங்கள். வறுமைக்கு அங்கு என்ன வேலை.
தமிழர் பகுதியான பன்குளத்திலும் சிங்களக் குடிகள் பரவத் தொடங்கின. காணி இல்லாத சிங்களவர்களுக்கு நிலம் வழங்க தமிழர் கிராமமான பன்குளத்திற்குள் சிங்கள அரசு இடம் கண்டுபிடித்தது.
தமிழர்களுக்கு நடுவில் சிங்களவர்களும் அங்கு குடிய மர்த்தப்பட்டார்கள். பன்குளத்தில் நடுத்தர வசதி வாய்ப்புக்களைக் கொண்ட குடும்பமொன்றைச் சேர்ந்தவள்தான் ஜஸ்மின். அப்பா, அம்மா, அக்கா, அண்ணா என்ற சிறிய வட்டத்தினுள் அவள் ஒரு சிறுமி. வீடு அழகான கிராமத்தின் வீதிகள், வயல்கள் எங்கள் சொந்த ஊரில் நாங்கள் வாழ்கின்றோம். இந்த வாழ்வு நிரந்தரமான தென்றுதான் அங்கு எல்லோரும் நினைத்தார்கள்.
ஆயிரத்துத் தொளாயிரத்து எழுபத்தேழு. இலங்கை முழுமைக்குமான தேர்தல் முடிவுற்று ஜெயவர்த்தனாவின் ஐக்கிய தேசியக் கட்சி அரசு கட்டிலேறி இருந்தது. தமிழர்கள் தங்கள் தேசம் சிறீலங்காவிலிருந்து விலகிச் செல்வதற்காக வாக்களித்திருந்தார்கள்.
தமிழர்களின் ஒன்றிணைவைக் கண்ட சிங்கள ஆட்சியாளர்கள் சினம் கொண்டார்கள். நள்ளிரவு; பன்குளம் கிராமம் தீப்பற்றி எரிந்தது. நெருப்பினூடாக சிங்களக் காடையர்கள் தமிழர்கள் மீது பாய்ந்தனர். அப்போதெல்லாம் ஜஸ்மினுக்கு நான்கு வயதுதான் நிறைந்திருந்தது.
கிராமம் தீப்பற்றி எரிந்ததும் அவளை அணைத்தபடி வயல்களிலும், காடுகளிலும் அம்மா ஓடியதும் அவளுக்கு சிலகாலம் நினைவலைகளில் நின்றன. பின்பு மறந்து போனாள்.
எண்பத்தி மூன்று, அப்போது ஜஸ்மினுக்கு பத்து வயது. தந்தையை இழந்த பின், அவர்கள் நால்வரையும் வளர்க்க அம்மா போராடிக்கொண்டிருந்த காலம்.
அன்றும் அப்படித்தான். இரவு வானொலிச் செய்தியைத் தொடர்ந்து பன்குளம் சந்தியின் மத்தியில் தமிழர் கடைகளில் தீ எழுந்தது.
சிங்களக் காடையர்களின் வெறிக் கூச்சல்கள்.. தமிழ் மக்களின் அவலக்குரல்... பன்குளம் கிராமத்தில் படர்ந்தது. இளைஞர்களில் சிலர் எதிர்த்தனர்.
ஆனால், காடையரின் துணைக்கு அரச காவலர்களும். தமிழர்களின் இரத்தம் எங்கும் சிந்தியது.
அம்மா ஜஸ்மினையும் இழுத்துக் கொண்டு காட்டுக்குள் ஓடினாள். பசியுடனும் பட்டினியுடனும் நாட்கள் கடந்தன. மீண்டும் கிராமத்திற்கு வந்த போது எங்கும் சாம்பல் மேடுகள். பலரை அந்த மண் பறிகொடுத்திருந்தது.
ஜஸ்மின் சிறுமி. அவளுக்கு எதுவும் விளங்கவில்லை. ஆனால், சிங்களவர்கள், சிங்கள அரசின் காவலர்கள் என்றால் வெறுப்பும், கோபமும் அந்த சின்ன வயதிலே மனதில் குடிகொண்டு விட்டது.
எண்பத்தி ஆறு. இப்போது ஜஸ்மினுக்கு பதின்மூன்று வயது. பன்குளத்தில் சிங்களவரின் தொகை பெருகியிருந்தது. தமிழரின் நிலங்களும் வயல்களும் அடாத்தாகப் பறிக்கப்பட்டிருந்தன. அவை, இப்போது சிங்களவருக்கு சொந்தமாகி இருந்தன. இம்முறை தமிழர்கள் மீது சிங்களவர் பாய்ந்து ஓய்ந்த பொழுது ஜஸ்மின் நிலைமைகளை ஓரளவு புரிந்து கொண் டாள்.
சிந்தப்படும் இரத்தத்தினதும் கண்ணீரினதும் பெறுமதி அவளுக்கு நன்றாகவே விளங்கியது. அந்த மண்ணில் தமிழர்களின் வாழ்வு நிச்சய மற்றதொன்றாகிப் போனது. சிங்களவர் சினங்கொள்ளும் போதெல்லாம் தமிழர்கள் அழிந்தனர்.
இதற்கிடையில் ஜஸ்மினின் அண்ணன் புலிகளுடன் இணைந்து கொண்டான். அண்ணனை சில நிமிடம் காணாது விட்டாலும் தவிக்கும் அம்மா அந்தச் செய்தியை கேட்ட பின்பும் அமைதியாக இருந்தாள். சொல்லப் போனால், அவன் சென்றதை அவளும் விரும்பினாள்.
அவர்கள் வாழ்வதாக இருந்தால் போராட வேண்டும் அல்லது அழிந்து போக வேண்டி வரும் என்பதை அம்மா அனுபவத்தில் தெரிந்திருந்தாள்.
அழிவுகள் அடாவடித்தனங்கள் இறுதியாக பன்குளத்திலிருந்து தமிழ் மக்கள் ஒரேயடியாக விரட்டப்பட்டனர் :
ஜஸ்மின் குடும்பத்தினருடன் ஆலங்கேணி கிராமத்தில் தங்கி இருந்தாள் 1990 இந்தியப்படை வெளியேறி சில நாட்கள் கடந்திருந்தன :
சிங்கள அரசு பேச்சு வார்த்தை என்று நாடகமாடிக் கொண்டிருந்தது. தமிழர்களின் சுதந்திர வாழ்வுக்கு தாயகத்தின் விடுதலை அவசியமானது என்பதை ஜஸ்மின் உணர்ந்து கொண்டாள். அவளும், அவளின் தோழிகளில் சிலரும் கிராமத்திலிருந்து புறப்பட்டார்கள்.
ஜஸ்மின் அவளின் கைகளில் தேசத்தை மீட்பதற்கான ஆயுதம். அவளும், அவளது கிராமத்தவர்களும் கண்டு விட்டு ஓடிய 'அரசு காவலர்களின் கைகளில் இருந்த ஆயுதம்' இன்று அவளின் கைகளிலும் இருந்தது.
களங்களில் அவள் வீரமுடன் போரிட்டாள். சண்டை நடைபெறும் ஒவ்வொரு களத்திற்கும் போகவேண்டும் என்று அவாவி நின்றாள். சிறுவயது தொடக்கம் சிங் ளவர்களின் அட்டூழியங்களையும், அடாவடித்தனங்களையும் காலத்திற்குக் காலம் அனுபவித்த அவளுக்குள் - கடினமான போராட்ட வாழ்க்கையை இலகுவாக எடுக்கும் மனவுறுதி குடிகொண்டு விட்டது. அதனால் தான், முகாமிலும் சண்டைகளின் போதும் அவளால் சிரித்துக் கொண்டு உலாவ முடிந்தது.
ஆகாய கடல்வெளி இராணுவ நடவடிக்கையை புலிகள் தொடங்கிய போது, அதில் ஜஸ்மினும் ஒருத்தியாகக் கலந்து கொண்டாள். வெவ்வேறு. முனைகளால் ஆனையிறவு தளம் மீதான தாக்குதல்கள் ஆரம்பமாகின. தேவைப்படும் போதெல்லாம் ஜஸ்மினின் துப்பாக்கியும் எதிரிகளை அகற்றப் போராடியது.
அதே நேரம் திருகோணமலை காட்டுப் பகுதிக்குள் நடந்துகொண்டிருந்த புலி ளின் ஒரு அணி மீது இராணுவத்தினர் பதுங்கி இருந்து தாக்கினார்கள்.
ஜஸ்மினின் அண்ணன் சபேசன் அதில் காயமடைந்திருந்தான். சில நாட்களின் பின்பு யாழ். மாவட்டத்தின் ஓர் வைத்தியசாலையில் அவன் சேர்க்கப்பட்டிருந்தான். அவனைப் பார்ப்பதற்காக வன்னிப் பகுதியில் ஏதோ ஓர் அகதி முகாமில் தங்கியிருந்த அம்மா வந்திருந்தாள்.
மகனைப் பார்த்த பின் மகளைப் பார்க்க அவள் விரும்பினாள். சண்டை கடுமையாக நடந்து கொண்டிருந்தது. தாய் நிலத்தை காக்கும் போரிலிருந்து சிறு பொழு தென்றாலும் விலகிவர ஜஸ்மினால் முடியவில்லை.
உணவற்ற, உறக்கமற்ற நிலையில் ரவை மலைக்குள் நின்று அவர்கள் சண்டையிட்டுக் கொண்டிருந்தார்கள். ஜஸ்மின் வழமை போல் சிரித்தாள். மகிழ்ச்சியாக இருந்தாள். எதிரிகளைக் கண்ட போது மட்டும் ஆவேசத்துடன் போரிட்டாள்.
மகனைப் பார்த்து விட்டு திரும்பிய தாய் அகதி முகாம் வாசலில் கால்வைத்த பொழுது, அவளுக்கு துயரம் நிறைந்த அந்தச் செய்தி கிடைத்தது.
ஜஸ்மின் வீரச்சாவடைந்து விட்டாள். அம்மாவின் சோகமாக ஜஸ்மினின் மகளின் இழப்பு இதயத்தை அழுத்தினாலும் உன்னதமான வாழ்வை நினைத்து அவளால் அழ முடியவில்லை. ஆனையிறவின் உப்புக் காற்று அவளின் வீரம் நிறைந்த வரலாற்றை என்றும் சொல்லிக் கொண்டிருக்கும் என்பது அம்மாவுக்கு நன்றாகவே தெரியும்.
தமிழன்.
0 கருத்துகள்