Ad Code

Recent Posts

கப்டன் சந்தியா வீர வரலாற்று நினைவுகள்

கப்டன் சந்தியா

யோகேஸ்வரி தேசிங்கம் 

கரணவாய் மேற்கு, 

உடுப்பிட்டி, யாழ்ப்பாணம்

வீரப்பிறப்பு: 29.09.1967  

வீரச்சாவு: 18.06.1992


நிகழ்வு: யாழ்ப்பாணம் மண்டைதீவிலிருந்து யாழ். கோட்டைப்பகுதி மீது சிறிலங்கா படையினர் மேற்கொண்ட எறிகணைத் தாக்குதலில் வீரச்சாவு


1989 இந்திய இராணுவம் வீதிக்கு வீதி முகாம் அமைத்து தமிழ் மக்களை வேட்டையாடிக் கொண்டிருந்த காலம். இந்த வேளையில் எமது விடுதலைப் போராட்டமும் புதியதோர் பரிமாணத்தைப் பெற்றுக் கொள்கிறது. விடுதலைப் புலிகளின் போராட்டத் திறனையும், அவர்களது வீரத்தையும், தியாக உணர்வையும் உலகம் மென்மேலும் தெரிந்து கொள்கிறது.


எமது விடுதலைப் போராட்டத்தை நசுக்கிவிடலாம் - அழித்துவிடலாம் எனக் கனவு கண்ட இந்திய வல்லாதிக்கம், எம் மண்ணிலே வேர்விட்டு விழுதெறிந்து நின்ற விடுதலைப் போரிற்கு முகங்கொடுக்க முடியாது மண்கவ்வியது.


இக் காலத்தில்தான் கப்டன் சந்தியா தன்னை இந்தப் போராட்டத்துடன் முழுமையாக இணைத்துக் கொண்டார்.


அவள் இப்போராட்டத்துடன் தன்னை இணைத்துக் கொண்டது ஒன்றும் திடீர் முடிவல்ல. நீண்ட காலமாகவே அவள் எமது விடுதலைப் போராட்டத்துடன் இணைந்து நின்று, தன் பங்களிப்பை வழங்கி வந்தாள்.


1984 -1987 காலப்பகுதியிலே 'சுதந்திரப் பறவைகள்' அமைப்பிலே இணைந்து செயற்பட்டாள். வீட்டுக்குள்ளே பெண்ணைப் பூட்டி வைத்து வேடிக்கை பார்த்த சமுதாயத்திலிருந்து, விலங்குடைத்துப் புறப்பட்ட வீரவேங்கை இவள்.


பாலர் பாடசாலை ஒன்றில் ஆசிரியராக இருந்து கொண்டு சிறுவர்களின் கல்வியில் தனது கவனத்தைச் செலுத்திய அதேவேளை, ஆரம்ப சுகாதார நிலையங்கள் அமைத்து, கிராம ரீதியாக பின்தங்கிய நிலையிலே வாழ்கின்ற மக்களது நலனுக்காக -குறிப்பாக கர்ப்பிணிப் பெண்கள், சிறுவர்கள் போன்றோரின் ஆரோக்கியமான உடல் வளர்ச்சிக்காக உழைத்தாள். இக்காலத்தில் இவள் செய்த வேலைகளை நாம் பட்டியலிட்டுக் காட்டுவது என்பது மிகவும் கடினமான விடயம். அந்தளவு தூரத்திற்கு இரவு பகல் என்று பாராது செயற்பட்டாள் சந்தியா.


இந்திய இராணுவம் எம்மண்ணில் நிலைகொண்டிருந்த - நேரத்திலே இராணுவப் பயிற்சி பெறாத நிலையிலும் - மிகுந்த துணிவுடனும், நம்பிக்கையுடனும் செயற்பட்டாள். காயமடைந்த போராளிகளைப் பராமரிப்பது, போராளிகளுக்குத் தேவையான மருந்து , உணவு போன்ற பொருட்களைப் பெற்றுக் கொடுப்பது போன்ற வேலைகளில் தன்னுடைய தோழிகளையும் இனைணத்துக் கொண்டு செயற்பட்டாள். இதேவேளை போராளிகளின் 'நடமாடும் தொடர்பு சாதனமாகவும்' சந்தியா இருந்தாள்.


இந்நேரம்தான் சந்தியாவின் மனதை உலுக்கும் அந்தச் சம்பவம் நடந்தது. சந்தியா தன் உயிருக்குயிராக தன் வாழ்க்கைத் துணைவனாக நேசித்த மேஜர் சலாம், இந்திய இராணுவத்துடனான மோதல் ஒன்றின்போது வீரச்சாவைத் தழுவிக் கொள்கிறார்.


துயரச் சுமை தாங்கமுடியாது சந்தியா துடித்தாள். இறந்தவர்களின் உடல்களுக்கு இறுதி மரியாதை கூட செலுத்த அனுமதியாத அந்த இராணுவத்தின் கொடுமை கண்டு குமுறினாள்.


தனது துயர் இந்த மண்ணுக்கு ஏற்படக் கூடாது, சொந்தங்களைப் பிரிந்து வாழ்கின்ற அந்தச் சோகம் எமது மக்களுக்கு ஏற்படக் கூடாதெனில் எம் நாடு விரைவில் விடுதலை பெறவேண்டும் என, வேகம் கொண்டெழுந்தாள். 2ஆம் லெப். சாளினியையும் கூட்டிக் கொண்டு பயிற்சிப் பாசறை வந்தாள் சந்தியா.


சந்தியாவை முதன்முதலாக சந்தித்த அந்த நாளை, இப்பொழுதும் எங்கள் தோழிகள் நினைவு கூருவார்கள்.


1989 மாசி மாதம், மகளிர் படையின் 4வது பயிற்சி முகாமை நடத்துவதற்கான வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. எத்தனையோ தடைகளைத் தாண்டி பயிற்சிக்களம் நோக்கி வந்துகொண்டிருந்தார்கள் பெண்கள். சந்தியா பயிற்சிப் பாசறைக்குள் காலடி வைத்த நேரம் போராளிகளின் சாப்பாட்டு நேரமாக இருந்தது. சமையல் பகுதியில் போடப்பட்டிருந்த மரக் கட்டைகளில் உட்கார்ந்த படி சாப்பிட்டுக் கொண்டிருந்தவர்கள், ஆளரவம் கேட்டு நிமிர்கிறார்கள். நிமிர்ந்த அனைவரதும் விழிகள் அப்படி.. - .. அப்படியே ஒரு கணம் சந்தியாவில் தரித்து நின்றன.


ஆம்! நிமிர்ந்த நடை, நேர் கொண்ட பார்வை, நிலத்தில் எவர்க்கும் அஞ்சாத தோற்றம்... இவள்தான் கப்டன் சந்தியா எல்லோரது உதடுகளும் இப்பொழுது ஒரேயொரு சொல்லை மட்டும் உச்சரித்தது: "கெவி வெப்பன்". ஆம்! அவளுடைய தோற்றத்தினையும் அவளுடைய செயற்திறனையும் பார்த்து வியந்த எமது தலைவர், சந்தியாவைப் பற்றி பின்வருமாறுதான் கூறினார்: சந்தியாவினுடைய தோற்றத்திற்கு ஜி3, எம் 16 அல்லது எஸ். எல். ஆர். என் பவை சரிவராது. இவவுக்கு கெவி வெப்பன்தான் கொடுக்க வேண்டும்".


உண்மை . சந்தியா தனது பயிற்சியாலும், செயல்திறனாலும் தலைவரின் பாராட்டுதலை தனக்குரியதாக்கிக் கொண்டாள். முதன்முதலாக தலைவரிடமிருந்து '30 கலிபர்' சந்தியாவுக்கு வழங்கப்படுகின்றது - அன்றிலிருந்து யாரும் : சந்தியா என்று அழைத்தது கிடையாது. 'கெவி வெப்பன் சந்தியா' என்பதே அவளுக்குரிய பெயராய் மாறிவிட்டது. காட்டுக்குள்ளே தனது பயிற்சியைச் சந்தியா மேற்கொண்டிருந்த வேளை, வெலிஓயா இராணுவ முகாம் மீதான தாக்குதலுக்கு எம்மால் திட்ட மிடப்பட்டது. 


இவ்வேளை தானும் சண்டைக்கு வரவேண்டும் எனச் சண்டையிட்டாள். இறுதியில் இவளும் இன்னும் சிலரும் உதவிப்படையணியாக அனுப்பப்பட்டனர். காயப்பட்ட போராளிகளையும், வென்றெடுக்கப்பட்ட ஆயுதங்களையும் சுமந்தபடி பாசறை திரும்பினாள். அன்றுதான் இவளது பேராற்றல் எல்லோராலும் உணரப்பட்டது.


பயிற்சிக் காலத்தில் இவளுடன், கூடித் திரிவது என்பது எல்லோருக்கும் விருப்பமான விடயம். தன் கண்முன்னால்


ஒரு போராளி கஸ்டப்படுவதை இவள் பார்த்துக் கொண்டிருக்கமாட்டாள். எல்லாருடைய கஸ்டங்களையும் தானே சுமக்க முன்வருவாள். தன்னுடன் பாரம் தூக்க வருபவர்களிடம் எப்பொழுதும் சிறிய பொருட்களைக் கொடுத்தபின், பெரிய மூடைகளைத் தான் மிகவும் இலாவகமாக தோளில் அடித்த படியே, "கொக்குளாய்க் காட்டுக்குள்ளே பெட்டியைத் தூக்கவா.." என்று பாடியபடியே வருவாள்.


பாசறையில் கலகலப்புக்குப் பேர்போனவள் சந்தியா. சந்தியா இருக்குமிடத்தில் எப்பொழுதும் பாட்டுச் சத்தம் கேட்டபடிதான் இருக்கும். "புதுயுகம் எழுகுது, பூவையரே விழித்தெழுக.." என்றொரு பாடலை, தானே இசையமைத்து பாடினாள் சந்தியா.


எந்தவொரு கஸ்டமென்றாலும் அதனை வேடிக்கையாக்கி மகிழ்வதும் இவளது இயல்பான சுபாவம். காட்டு வாழ்வின்போது அடிக்கடி குளிக்க முடியாது. ஆரம்பத்தில் எல்லோருக்கும் இதனைத் தாங்கிக் கொள்வது


கஸ்டமாகத் தான் இருந்தது. குளிக்கத் தண்ணீர் இல்லாவிட்டாலும் முகமாவது கழுவ வேண்டும் என்றபடி, மரங்களின் இலைகளில் தங்கி நின்ற சிலிர் நீரைக் கைகளால் தொட்டு எடுத்து, முகம் கழுவுவாள். இதுவே எல்லோருக்கும் வேடிக்கையாகவும் மனதைச் சமாதானப்படுத்துவதாகவும் அமைந்துவிடும்.


காட்டுக்குள்ளே தனது பயிற்சி வாழ்க்கையை முடித்துக் கொண்டு ஊருக்குள் காலடி வைத்தபொழுது ஏற்பட்டிருந்த தற்காலிக அமைதியின் போது, தனது தோழிகள் ஒவ்வொருவருக்கும் சந்தியா சொல்லுவாள்: "என்ன அம்மான் சிறீலங்கன் தமிழ் மக்களுக்குரிய - நியாயமான தீர்வை நிச்சயம் வழங்குவான் என்று எதிர்பார்க்கிறீர்களா? இதுதான் அம்மான் ஆபத்தான காலம். போரும் இல்லாமல், சமாதானமும் இல்லாமல் தமிழ் மக்கள் ஏமாற்றப்படுகின்ற காலம். இதற்கு நாம் இடம் வழங்கக் கூடாது. எமது இலட்சியத் தில் உறுதியாக நிற்க வேண்டும்.


மீண்டும் சிறீலங்கா தமிழ் மக்கள் மீதான இராணுவ வன்முறைப் போரைத் தொடர்ந்தபோது, கற்கோவளப் பகுதியில் குழுவொன்றின் தலைவியாகப் பொறுப்பேற்று நின்றாள்.


இவளது துப்பாக்கி எதிரிக்குப் பதில் சொல்லாத இடமே இல்லை என்று கூறலாம். அந்தளவு தூரத்திற்கு, எங்கெல்லாம் தாக்குதல் நடக்கிறதோ அங்கெல்லாம் சந்தியா நிற்பாள். அவள் துப்பாக்கி எதிரிக்கு விடை தரும்.


பலாலி, கோட்டை, மாவிட்டபுரம், காரைநகர், ஆனையிறவு... என்று தாக்குதற் பட்டியல் விரிந்து செல்லும்.


ஆனையிறவுச் சமரின்போது இவள் ஜி. பி. எம். ஜி. வைத்திருந்தாள். அவள் அதைத் தோளிலே வைத்துக்கொண்டு செல்லும்போது... இப்போதும் எங்கள் கண்முன்னே, கோட்டை அதிர நடக்கின்ற சந்தியாவின் தோற்றம் நிழலாடுகிறது.


போதிய உணவோ நீரோ இல்லாத நிலையிலும் சோர்வடையாது நின்று, ஆனையிறவுச் சமரிலே சந்தியா போரிட்டாள். இத்தாக்குதலிலே மிகவும் நெருங்கிய தூரத்திலே எதிரியை எதிர்கொள்ளும் வேளையிலே, இவளது ஜி. பி. எம். ஜி. செயலிழந்துவிடுகிறது. அந்த இடத்தில் சிறிதுகூட அவள் மனம் தளரவில்லை . தனக்கு அண்மையில் காயமடைந்த நிலையில் இருந்த ஆண் போராளி ஒருவரைத் தனது தோளிலும் இன்னொரு தோளில் ஜி. பி. எம். ஜியுமாக நடந்துவந்த தோற்றத்தைப் பார்த்த எமது தோழர்கள், உது | சந்தியாவால்தான் முடியும்" என்று வியந்தார்கள்.


தனது செயலிழந்த ஆயுதத்தைத் தனது ஆயுத உதவியாளரிடம் ஒப்படைத்துவிட்டு, அவரது ஆயுதத்தை எடுத்துக் கொண்டு, மீண்டும் சென்று மோதினாள். இந்நிலையில் தான், சந்தியா வயிற்றில் காயமடைந்த நிலையில் வைத்தியசாலைக்கு அனுப்பப்படுகிறாள்.


வைத்தியசாலையில் காயப்பட்ட நிலையில் அனுமதிக்கப்பட்ட எமது போராளிகள் சத்திரசிகிச்சை முடிந்த நிலையில், மயக்கம் முற்றாகத் தெளியாத நிலையில், களத்தில் நின்ற மனவேகம் குறையாது தன்னிலையில் கத்திக்கொண்டே இருப்பார்கள். ஒவ்வொரு போராளியினதும் இதயதாகத்தை -உயிர் மூச்சை- இந்நிலையில் தெளிவாக உணர்ந்து கொள்ளலாம். 


மயக்க நிலையில் சந்தியா கத்திக்கொண்டிருந்தாள்: "அண்ணை என்னை விடண்ணை. நான் கரும்புலியாகப் போகப்போறன். என்னை விடண்ணை " என்று, இடை விடாது ஒலித்துக் கொண்டிருந்தாள்.


இந்த மனோபாவமும் வேகமும் தியாக உணர்வும்தான், இன்று எங்களது விடுதலைப் போரை உலக அரங்கிற்கு எடுத்துக் காட்டியிருக்கிறது. -


வைத்தியசாலையில் இவள் இதனைத்தவிர வேறெந்த நிலையிலும் கவலைப்பட்டதே கிடையாது. "எனக்கு இதுவும் ஒரு காயமா" என்றபடி, ஏளைக் கவனிப்பதில் ஈடுபடுவாள்.


மீண்டும் பல முனைகளிலும் சிறீலங்கா இராணுவம் தனது தாக்குதல் நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியது. எமது வீரர்களும் எதிரியை அழிக்காது விடமாட்டோம் என்ற ஆவேசத்துடன் நின்றனர். எதிரியை ஒரு அங்குலமேனும் நகரவிடமாட்டோம் என்ற ஆவேசத்துடன், கோட்டையில் சந்தியாவின் குழு மண்டைதீவு இராணுவம் கோட்டையை நோக்கித் தாக்குதல் தொடுக்கும் நேரங்களில் எல்லாம் சந்தியாவைத் தேடி மக்கள் படை வந்து சேரும். சந்தியாக்கா எப்படி இருக்கிறா என்று பார்த்துப் போனால்தான் அவர்கள் மனம் ஆறுதலடையும். அங்கே ... போனவர்கள் புளகித்துப்போய் நிற்பார்கள். அவளின் அன்பான வார்த்தைகளால் நிறைவடைந்து மீண்டும் செல்வார்கள். அந்தளவு தூரத்திற்கு இவள் நேசித்த மக்கள் இவளை நேசித்தார்கள்.


தான் நேசித்த இந்தத் தேசிய விடியலுக்காக, எங்கள் சந்தியா தன்னை அர்ப்பணித்து விட்டாள்.


18.06.1992 அதிகாலை 5. 40 மணி, மண்டைதீவு இராணுவத்தினருடன் ஏற்பட்ட நேரடி மோதலின்போது மேற்கொள்ளப்பட்ட 'செல்' தாக்குதலில், கப்டன் சந்தியா வீரச்சாவைத் தழுவிக்கொண்டுவிட்டாள். எந்த மண்ணை நேசித்தாளோ அந்த மண்ணணின் விடிவுக்கான வித்துக்களைத் தூவிவிட்டுச் சென்றுவிட்டாள்.


ஆம்! தன்னுடைய முதல் நன்மைக் கொண்டாட்டத்தின் போது சந்தியாக்காவிடம்தான் நான் கைவிசேடம் வாங்குவேன் என்று ஆசையுடன் காத்திருந்த...... கோட்டை வாசலில் ஏக்கம் ததும்பிய விழிகளுடன் சந்தியாவைத் தேடி நிற்கின்ற ஒன்பது வயதுச் சிறுவன் ஜோனைப் பார்க்கின்றேன்... எம்மண் விடுவிக்கப்படும் வரை போராட்டம் தொடரும் என்பதன் சாட்சியாய்.





-களத்தில் இதலிருந்து 

விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணையும், மக்களையும் காத்த வீரமறவர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…! 
 “புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

கருத்துரையிடுக

0 கருத்துகள்

Ad Code